உலக கோப்பையில் ஆடப்போகும் இந்திய அணி எது என்பதில் இன்னும் தெளிவு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் உலக கோப்பை நடக்க உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே இருப்பதால், அதற்குள்ளாக சிறந்த 11 வீரர்களை கொண்ட இந்திய அணியை முடிவு செய்ய வேண்டும். ஆனால் இன்னும் மிடில் ஆர்டருக்கான தேடல், சரியான ஆல்ரவுண்டர் யார் என்பது குறித்த குழப்பங்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. 

முதல் மூன்று இடங்கள் ரோஹித், தவான், கோலி என்பது உறுதி. மிடில் ஆர்டரில் 4ம் இடத்தில் நீடித்துவந்த பிரச்னைக்கு ராயுடு தீர்வாகிவிட்டார். ராயுடு 4ம் வரிசையில் மிகச்சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துவிட்டார். 6ம் இடத்தில் தோனி. புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் உறுதியான வேகப்பந்துவீச்சாளர்கள். கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக உமேஷ், கலீல் ஆகியோர் இருக்கக்கூடும்.

ஆல்ரவுண்டர் மற்றும் ஸ்பின் பவுலர்கள் யார் என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. பாண்டியா காயம் காரணமாக வெளியேறியிருப்பதால் ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளார். பாண்டியா வந்துவிட்டால், அணியில் ஜடேஜாவின் நிலை, 5ம் வரிசை வீரர் ஆகியவை குறித்த கேள்விகள் உள்ளன. 

ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை குல்தீப் நன்றாக வீசுகிறார். ஆனால் சாஹல் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. எனவே அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் அனுபவம் கருதி உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. 

எது எப்படியோ 11 சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணியாக, இதுதான் எங்கள் பெஸ்ட் டீம் என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் இந்திய அணி உலக கோப்பையில் ஆட வேண்டும். குறிப்பிட்ட போட்டியில் ஆடும் 11 வீரர்கள், எதிரணி, ஆடுகளம், சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே எடுக்கப்படுவர். எனினும் சிறந்த வீரர்களை கொண்ட அணியுடன் இந்தியா, இங்கிலாந்திற்கு பயணிக்க வேண்டும்.

எனவே வீரர்கள் தேர்வு என்பது தேர்வுக்குழுவிற்கு பெரும் தலைவலியாகவே இருக்கப்போகிறது. இந்நிலையில், இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், இந்திய அணி தற்போது அதன் மிகச்சிறந்த 11 வீரர்களுடன் ஆடுவதாக நான் நினைக்கவில்லை. இன்னும் இந்திய அணியில் ஆடப்போகும் சிறந்த 11 வீரர்கள் யார் என்ற தெளிவு இல்லை என்றே கருதுகிறேன். எனவே பெஸ்ட் 11 வீரர்களை தேர்ந்தெடுத்து உலக கோப்பையில் ஆட வேண்டும் என்று ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.