இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, இம்முறை அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

யுவராஜ் சிங்கின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை எடுத்துள்ளது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் இந்த சீசனில் ஆட உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல்லில் யுவராஜ் சிங் ஆட உள்ள ஆறாவது அணி. கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகளில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சிக்கல் இருந்துவருகிறது. அதனால் கடந்த சீசனில் கூட, தொடக்க வீரராக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா, தொடரின் பாதியில் மிடில் ஆர்டரில் இறங்கினார். இவ்வாறு அந்த அணியில் மிடில் ஆர்டரில் சிக்கல் இருந்துவரும் நிலையில், மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி, ரோஹித் சர்மாவின் அழுத்தத்தை குறைக்க உள்ளதாகவும் அதன் மூலம் ரோஹித் சர்மா தனது இயல்பான ஓபனிங் பேட்டிங்கை ஆட உதவ உள்ளதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் யுவராஜ் சிங் அடித்த அபாரமான ஷாட் ஒன்று வைரலாக பரவிவருகிறது. இந்திய அணியில் ஆடாவிட்டாலும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் ஆடிவந்தார். அண்மையில் ஃபிரெண்ட்லி போட்டி ஒன்றில் ஏர் இந்தியா அணிக்காக ஆடிய யுவராஜ் சிங், மாலத்தீவு அணிக்கு எதிராக ஆடியபோது ஓர் அபாரமான ஷாட்டை ஆடியுள்ளார். அவர் சிக்ஸர் அடித்த வீடியோ வைரலாகிவருகிறது. யுவராஜ் சிங்கின் இந்த ஷாட் அவரது ரசிகர்களுக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருப்பதோடு, அவர் ஆடுவதை பார்க்கும் ஆவலையும் தூண்டியுள்ளது.