இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு இனிமேல் இந்திய அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக பிசிசிஐ தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 

இந்திய கேப்டன் விராட் கோலி, தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வீரர்களின் ஊதிய உயர்வுக்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது.

அதன்படி, வீரர்களை தரம்பிரித்து அவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சீனியாரிட்டி மற்றும் திறமையின் அடிப்படையில் ஏ, பி, சி என வீரர்கள் தரம் பிரிக்கப்படுவர். அதனடிப்படையில் வீரர்களுக்கான ஊதிய உயர்வு விகிதமும் ஊதியமும் அமையும்.

வீரர்களை தரம்பிரிக்கும் பணியை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மேற்கொள்வார். இந்த புதிய ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடிலிருந்து தோனி, பி கிரேடுக்கு கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் “ஏ” கிரேடிலிருந்து “பி” கிரேடுக்கு தரம் குறைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்த பட்டியலில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறுவது சந்தேகம் தான் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு எந்த போட்டியிலும் யுவராஜ் சிங் ஆடவில்லை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பைக்காக இளம் அணி தயாராகி வருகிறது. அதனால் இனிமேல் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்க பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. எனினும் நம்பிக்கையுடன் காத்திருக்கும் யுவராஜ் சிங், அடுத்த ஆண்டுக்குப் பிறகுதான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய ஒப்பந்த பட்டியலில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெற வாய்ப்பில்லை என கூறப்படுவதன் மூலம், அணியில் அவருக்கு இடமில்லை என்பதை மறைமுகமாக பிசிசிஐ வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. 2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற போது தொடர் நாயகன் விருதை வென்றவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பையை வெல்ல யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.