கோலியை நம்பி மட்டுமே இந்திய அணி இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 முறை ஆசிய கோப்பை தொடர் நடந்துள்ளது. அவற்றில் 6 முறை இந்திய அணியும் 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாகிஸ்தான் அணியும் கோப்பையை வென்றுள்ளன. 14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 28ம் தேதி நிறைவடைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என மொத்தம் 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம் பெறும். செப்டம்பர் 15ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கையும் வங்கதேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் இந்திய அணி, அதற்கு மறுநாளான 19ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 

இத்தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். ஆசிய கோப்பை தொடரில் ராகுல், மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்தும் கோலிக்கு அளிக்கப்பட்ட ஓய்வு குறித்தும் பேசியுள்ள டீன் ஜோன்ஸ், இந்திய அணியை கோலியை மட்டுமே நம்பி இல்லை. கோலியின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்யமுடியாது. ஆனால் இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். மனீஷ் பாண்டே, அம்பாதி ராயுடு போன்ற வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. இந்திய அணியில் தோனியும் உள்ளார். அவரை மறந்துவிடக்கூடாது. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறந்த அணி. சாஹல், குல்தீப் ஆகிய சிறந்த ஸ்பின்னர்களும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் நிறைந்த ஒரு முழுமையான அணி இந்திய அணி.

எனவே கோலி அணியில் இல்லயென்றாலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை உலகமே உற்றுநோக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டியில் பல ஆச்சரியங்களும் வாணவேடிக்கைகளும் உறுதியாக இருக்கும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.