World Super Series Badminton Sindhu wins the second match Srikanth fails ...

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரூப் சுற்றின் 2-வது ஆட்டத்திலும் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிப் பெற்றார். இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

உலகத் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் துபை ஓபன் பாட்மிண்டன் புதன்கிழமை தொடங்கியது.

குரூப் "பி' பிரிவில் இடம்பெற்றுள்ளார் ஸ்ரீகாந்த். அவருடன் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன், சௌ டின் சென், சீனா வீரர் ஷி யூகி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

குரூப் பிரிவில், ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி, டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸன்னிடம் முதல் ஆட்டத்தில் மோதிய ஸ்ரீகாந்த், அவரிடம் 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தார்.

இந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் சௌ டின் சென்-ஐ நேற்று எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். குரூப் பிரிவில் இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியிருப்பினும், ஸ்ரீகாந்தால் அரையிறுதிக்குச் சுற்றுக்கு செல்ல முடியாது.

இந்த ஆட்டத்தில் முதல் இரண்டு செட்களையும் 21-18, 21-18 என்ற கணக்கில் சௌ டின் சென் கைப்பற்றினார்.

குரூப் பிரிவில் தனது கடைசி ஆட்டத்தில், சீன வீரர் ஷி யூகியை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

ஷி யூகி ஏற்கெனவே இரண்டு வெற்றிகளை ருசித்துள்ளதால், அவர் ஏற்கன்வே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மகளிர் பிரிவில் இரண்டாவது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி. சிந்து 21-13, 21-12 என்ற செட் கணக்கில் ஜப்பானில் சயாகோ சாடோவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 36 நிமிடங்களில் முடிவடைந்தது.

முதல் ஆட்டத்தில், மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹி பிங்ஜியாவை 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

குரூப் பிரிவில் 2 வெற்றிகளை ருசித்ததன் மூலம் சிந்துவும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.