World Hockey League India lost to Malaysia

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியின் காலிறுதியில் இந்திய அணியை 2-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்கடித்து வெற்றிக் கண்டதால் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதியதில் 19 மற்றும் 20-ஆவது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா இரு கோல்களை அடித்தது.

இதையடுத்து சரிவிலிருந்து மீள மிகவும் போராடிய இந்திய அணி 24 மற்றும் 26-ஆவது நிமிடங்கள் கோலடித்தது. இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.

இதையடுத்து ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல, 48-ஆவது நிமிடத்தில் மலேசியாவுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் ரஹிம் கோலடிக்க, அதுவே வெற்றிக்கோலாக அமைந்தது.

கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ந்து 2-ஆவது முறையாக மலேசியாவிடம் தோற்றுள்ளது இந்தியா.

அதேநேரத்தில் இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.

மலேசியா தனது அரையிறுதியில் அர்ஜென்டீனாவை சந்திக்கிறது.