World hockey league India and Malaysia are in the quarterfinals

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் குரூப் சுற்றில் நான்கு ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி, முதல் மூன்று ஆட்டங்களில் முறையே ஸ்காட்லாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வென்ற நிலையில், கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டது.

இதனால் "பி' பிரிவில் 2-ஆவது இடம்பிடித்த இந்திய அணி, காலிறுதியில் மலேசியாவை எதிர்கொள்கிறது.

தரவரிசையில் இந்திய அணி 6-ஆவது இடத்திலும், மலேசியா 14-ஆவது இடத்திலும் உள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்களத்தைப் பொறுத்தவரையில் ஆகாஷ்தீப் சிங், தல்விந்தர் சிங், எஸ்.வி.சுநீல், மன்தீப் சிங் கூட்டணி பலம் சேர்க்கிறது. மிட்பீல்டில் சர்தார் சிங், மன்பிரீத் சிங் கூட்டணி பலம் சேர்க்கிறது. ஆனால், பின்களம் பலவீனமாக இருக்கிறது.

ரூபிந்தர்பால் சிங் காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாததால் பெனால்டி வாய்ப்பில் கோலடிக்க ஹர்மான்பிரீத் சிங், ஜஸ்ஜித் சிங் ஆகியோரையே நம்பியுள்ளது இந்திய அணி.

இன்று நடைபெறும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனா, பாகிஸ்தானையும், நெதர்லாந்து, சீனாவையும், இங்கிலாந்து, கனடாவும் மோதுகின்றன.