World Chess Champion from India soon Viswanathan breakthroughs

செஸ் போட்டியில் இன்னொரு இந்தியர் உலக சாம்பியன் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆரூடம் கூறியுள்ளார்.

சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான செஸ் பயிற்சி முகாம் சென்னை வேளச்சேரி பார்க் ஹயாத் ஹோட்டலில் நேற்றுத் தொடங்கியது.

இம்முகாமை விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியது:

“செஸ் போட்டி குறித்து மாணவர்களுக்கு நான் முதன் முறையாக பயிற்சி அளிக்கும் முகாம் இதுவாகும். செஸ் போட்டியின் கோட்பாடுகள், ஆட்டத்தின் நெறிமுறைகள், போட்டிக்குத் தயாராகும் முறை, நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு மூன்று நாள்கள் தொடர்ந்து பயிற்சியளிக்க உள்ளேன்.

இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை செஸ் போட்டிகள் குறித்து மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்க உள்ளேன். செஸ் விளையாடுவதன் மூலம் கற்றல் திறன் மேம்படுவதுடன் நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செஸ் போட்டியை அறிமுகப்படுத்த வேண்டும்.

தற்போதைய உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்த பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். நான் சில போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு வயது ஒரு காரணம் அல்ல.

கடந்த 1987-ல் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் 36 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் செஸ் போட்டியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் சர்வதேச செஸ் போட்டிகளில் நமது நாடு பல்வேறு சாதனைகளைப் படைக்கும்.

செஸ் போட்டியில் இன்னொரு இந்தியர் உலக சாம்பியன் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வரும் ஜூன் மாதம் கிராண்ட் 2, செப்டம்பரில் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருகிறேன்” என்றார் அவர்.