உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நெவால் ஆகியோருக்கு நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

வரும் 21-ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. அதில் யாருடன் யார் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வது நேற்று நடைபெற்றது. அதன்படி பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோருக்கு நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை வெண்கலம் வென்றவரான சிந்து, தனது முதல் ஆட்டத்தில் தென் கொரியாவின் கிம் ஹியோ மின் அல்லது எகிப்தின் ஹதியா ஹோஸ்னியுடன் மோதுவார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்துவும், சீனாவின் சன் லூவும் மோத வாய்ப்புள்ளது.

2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான சாய்னா நெவால், தனது முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் சப்ரினா அல்லது உக்ரைனின் நடால்யாவுடன் மோத வாய்ப்புள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னாவும், தென் கொரியாவின் சங் ஜி ஹியூனும் மோத வாய்ப்புள்ளது.

இந்திய வீராங்கனை ரிது பர்ணா தனது முதல் சுற்றில் ஃபின்லாந்தின் அய்ரி மிக்கேலாவை சந்திக்கிறார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி லேடு தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் குளோ பிர்ச்சை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாய் பிரணீத், தனது முதல் சுற்றில் ஹாங்காங்கின் வெய் நானையும், இந்தியாவின் அஜய் ஜெயராம், ஆஸ்திரியாவின் லூக்கா ரேபரையும் சந்திக்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்முறையாக களமிறங்கும் இந்தியாவின் சமீர் வர்மா தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ அபியானுடன் மோதுகிறார்.

ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் தென் கொரியாவின் சுங் சியோக்கந்த் - கிம் துக்யங் இணையுடன் மோதுகிறது.

மற்றொரு இந்திய இணையான சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் ஜப்பானின் ஹிரோயூக்கி - யூட்டா வாடானேப் இணையுடன் மோதுகிறது.

மகளிர் இரட்டையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை தங்களின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் ரிரின் அமேலியா - மலேசியாவின் அன்னா சிங் இக் இணையுடன் மோதுகிறது.