Won by 97 runs Delhi Daredevils beat Pune ran
ஐபிஎல் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஓடவிட்டு வெற்றிப் பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
ஐபிஎல் ஒன்பதாவது லீக் ஆட்டம் புணேவில் நேற்று நடைப்பெற்றது.
டாஸ் வென்ற புணே முதலில் பந்துவீச தீர்மானித்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக, ஆதித்யா தாரே, சாம் பில்லிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆதித்யா தாரே டக் அவுட் ஆனார்கள்.
பின்னர் சஞ்சு சாம்சன் களத்துக்கு வந்தார். மறுமுனையில், நிதானமாக ஆடிவந்த சாம் பில்லிங்ஸ் 17 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அவரை அடுத்து வந்த ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனுடன் இணைந்தார்.
இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 50 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. 22 பந்துகளில் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த் ரன் அவுட்டானார்.
பின்னர் கோரே ஆண்டர்சன் களத்துக்கு வந்தார். மறுமுனையில் 63 பந்துகளுக்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் போல்டானார் சஞ்சு சாம்சன்.
பின்னர் வந்த கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்டினார். இப்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்தது டெல்லி.
புணே தரப்பில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஆடம் ஸம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன்களை இலக்காகக் கொண்டு ஆட்டத்தை தொடங்கிய புணே அணியில் மயங்க் அகர்வால் மட்டும் அதிகபட்சமாக 20 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
கேப்டன் ரஹானே 10, ராகுல் திரிபாதி 10, தோனி 11, ரஜத் பாட்டியா 16, தீபக் சாஹர் 14 என சொற்ப ஓட்டங்களுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.
எஞ்சிய வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவுட்டாகினர். இதனால், 16.1 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு புணே அணி மொத்தமாக சுருண்டது.
டெல்லி தரப்பில் ஜாஹிர் கான், அமித் மிஸ்ரா அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினர்.
