Women Tennis Tournament in india After Five Years
இந்தியாவில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மகளிர் டென்னிஸ் போட்டி (டபிள்யூடிஏ) வரும் நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 2012-ஆம் ஆண்டு 'ராயல் இந்தியன் ஓபன்' என்ற பெயரில் புணேவில் நடைபெற்றது. அதில், தற்போது உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, ஜப்பானின் கிமிகோ டேட் கிருமை வீழ்த்தி ஒற்றையர் பட்டம் வென்றார்.
அதன்பின்பு ஐந்து வருடங்கள் கழித்து மகளிர் டென்னிஸ் போட்டி (டபிள்யூடிஏ) வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் போட்டியில் 4 வைல்டு கார்டு வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம், இந்தியாவின் 4 வீராங்கனைகள் நேரடியாக பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவர்.
மும்பை மாநில புல்தரை டென்னிஸ் சங்க பொதுச் செயலர் சுந்தர் ஐயர் இதுகுறித்து கூறியது:
“இந்தியாவில் நடைபெறும் மகளிர் டென்னிஸ் போட்டியின் மூலம் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா, கர்மான் கெளர் தன்டி, ருதுயா போஸ்லே உள்ளிட்டோர் தங்களது ஆட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல இயலும்.
மேலும், தரவரிசையிலும் முன்னேறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வீராங்கனைகளின் நன்மைக்காக இந்தப் போட்டியை மும்பைக்கு கொண்டு வந்துள்ளோம்.
ஆஸ்திரேலிய ஒபனுக்கு முன்பாக, இந்தப் போட்டி இந்திய வீராங்கனைகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். உலகத் தரவரிசையில் 11 முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியால், இந்திய வீராங்கனைளின் ஆட்டம் மேம்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
