மகளிர் ஹாக்கியில், இந்தியா - தென் கொரியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன்ன் ஆனது. 

மகளிர் ஹாக்கி போட்டி சியோலில் நேற்று நடைபெற்றது. இதன் கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் வந்தனா கட்டாரியா கோலடிக்க, தென் கொரிய தரப்பில் போமி கிம் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

தொடக்கத்தில் இரு அணிகளுமே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலும் அவை தடுப்பாட்டை வெளிப்படுத்தியதே தவிர, கோல் போஸ்ட்டை நோக்கி அதிகம் முன்னேறவில்லை. 

இந்த நிலையில், 2-வது 15 நிமிட ஆட்டத்தில் தென் கொரியா சற்று முன்னேறி ஆடத் தொடங்கியது. அதன் பலனாக அந்த அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும், இந்திய கோல்கீப்பர் ரஜனி எடிமர்பு அதை திறமையாகத் தடுத்தார். 

இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிந்தது. பின்னர் தொடங்கிய 2-வது பாதியில் இந்தியாவுக்கு 41-வது நிமிடத்தில் முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. எனினும், அந்த வாய்ப்பில் கோல் போஸ்டை நோக்கி இந்தியா அடித்த பந்து, தென் கொரிய கோல்கீப்பர் மிஜின் ஹானின் தடுப்பில் தஞ்சமடைந்தது. 

கடைசி 15 நிமிடத்தில் இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆட, இந்தியா 48-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. கேப்டன் ராணி ராம்பால் பாஸ் செய்த பந்தை அருமையாகக் கடத்திச் சென்று ஃபீல்டு கோலடித்தார் வந்தனா கட்டாரியா. எனினும், இந்தியாவின் மகிழ்ச்சியை நீடிக்க விடாத தென் கொரியா, 50-வது நிமிடத்தில் போமி கிம் மூலமாக தனது கோலை எட்டியது.

எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.