கோவையில் நடைபெற்று வரும் தேசிய இளையோர் தடகளப் போட்டியில் 4-ஆவது நாளின் முடிவில் நடப்பு சாம்பியனான கேரளம் முன்னிலையில் உள்ளது.

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன. 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் வென்றோர் விவரம்:

ஆடவர் பிரிவு: 20 வயதுக்குள்பட்டோர் 400 மீ. தடை ஓட்டத்தில் தமிழகத்தின் சந்தோஷும் (53.08 விநாடி), 18 வயதுக்குள்பட்டோர் 400 மீ. தடை ஓட்டத்தில் கேரளத்தின் தாமஸ் மேத்யூவும் (53.89 விநாடி) முதலிடத்தைப் பிடித்தனர்.

18 வயதுக்குள்பட்டோர் 1,000 மீ. மெட்லீ தொடர் ஓட்டத்தில் ஹரியாணா (1 நிமிடம், 56.49 விநாடி) முதலிடத்தையும், கர்நாடகம் (1:57.30), தமிழகம் (1:57.31) ஆகியவை அடுத்த இரு இடங்களையும் பிடித்தன.

மகளிர்: 20 வயதுக்குள்பட்டோர் 400 மீ. தடை ஓட்டத்தில் தமிழகத்தின் லோகநாயகி (1 நிமிடம், 00.45 விநாடி) முதலிடத்தையும், பஞ்சாபின் வீர்பால் கெüர் (1:00.46 விநாடி) 2-ஆவது இடத்தையும், மேற்கு வங்கத்தின் டியாசா (1:03.22) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.

18 வயதுக்குள்பட்டோர் 400 மீ. தடை ஓட்டத்தில் கேரளத்தின் ஆர்ஷிதா (1:03.77 விநாடி) முதலிடத்தையும், கர்நாடகத்தின் பிபிஷா (1:04.25) 2-ஆவது இடத்தையும், கேரளத்தின் அனிலா வேணு (1:04.57) 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.

16 வயதுக்குள்பட்டோர் 1000 மீ. மெட்லீ தொடர் ஓட்டத்தில் கேரளம் (2 நிமிடம், 16.08 விநாடி) முதலிடத்தையும், தமிழகம் (2:17.27) 2-ஆவது இடத்தையும், கர்நாடகம் (2:21.57) 3-ஆவது இடத்தையும் பிடித்தன.

18 வயதுக்குள்பட்டோர் 1000 மீ. மெட்லீ தொடர் ஓட்டத்தில் தமிழகம் (2:15.25) முதலிடத்தையும், மகாராஷ்டிரம் (2:16:43) 2-ஆவது இடத்தையும், கேரளம் (2:16.60) மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

4-ஆவது நாளின் முடிவில் நடப்பு சாம்பியனான கேரளம் 330 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியாணா 324 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், தமிழகம் 308 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.