Wimbledon tennis tournament begins today Who will win the Rs 18 crore?

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இலண்டனில் இன்றுத் தொடங்குகிறது. இதில் வெற்றிப் பெறுபவருக்கு ரூ.18 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இலண்டனில் இன்றுத் தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை இந்த ஆண்டு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.263 கோடியாகும்.

இதில் ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ.18 கோடியும், இறுதிச் சுற்றில் தோற்பவர்களுக்கு தலா ரூ.9 கோடியும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இந்த முறை எட்டாவது பட்டத்தை எட்டிப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறார்.

இந்த முறை பட்டம் வெல்லும்பட்சத்தில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையை 35 வயதான ஃபெடரர் பெறுவார்.

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பட்டம் வெல்லாமல் இருந்த ரோஜர் ஃபெடரர், காயத்திலிருந்து மீண்ட பிறகு வலுவான வீரராக ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கி, தனது 18-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஹாலே ஓபனில் 9-ஆவது பட்டத்தை வென்ற ஃபெடரர், அடுத்ததாக தனக்கு சாதகமான புல்தரையில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார்.

ஃபெடரர், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இடையே பட்டம் வெல்வதில் போட்டி நிலவும்.

நடால், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு விம்பிள்டனில் களமிறங்குகிறார்.

ஜோகோவிச், ஏகான் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு விம்பிள்டனில் களம் காணுகிறார்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் முர்ரே, தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரரையும், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஜோகோவிச், ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸானையும் சந்திக்கின்றனர்.

போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், தனது முதல் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவையும் சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ரஃபேல் நடால், தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானையும் சந்திக்கின்றனர்.

மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் பங்கேற்கவில்லை. செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக இருப்பதாலும், ஷரபோவா காயம் காரணமாகவும் விம்பிள்டனில் இருந்து விலகியிருக்கிறார்கள்.

எனவே அடுத்த நிலையில் இருக்கும் வீராங்கனைகள் பட்டம் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான லாத்வியாவின் ஆஸ்டாபெங்கோ ஜெலீனா, ரஷியாவின் ஸ்வெட்லானா, ருமேனியாவின் சைமோனா ஹேலப் உள்ளிட்டோரிடையே பட்டம் வெல்வதில் போட்டி நிலவுகிறது.

ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சந்திக்க வாய்ப்புள்ளது. காலிறுதியில் கெர்பரும், ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவும் மோத வாய்ப்புள்ளது.

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்டாபெங்கோவும், ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும் மோத வாய்ப்புள்ளது.

காலிறுதியில் ஆஸ்டாபெங்கோ, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மோத வாய்ப்புள்ளது. போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் அதில், பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா அல்லது செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை சந்திக்க வாய்ப்புள்ளது.