இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிந்துவிட்டன. டி20 தொடரிலும் ஒரேயொரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 5-1 என அபாரமாக வென்றது.

தென்னாப்பிரிக்காவின் படுதோல்விக்கு அந்த அணியின் சீனியர் வீரர்களான டுபிளெசிஸ், டிவில்லியர்ஸ், குயிண்டன் டி காக், ஸ்டெயின் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டியின் இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அதை குயிண்டன் டி காக் எதிர்கொண்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தும் மூன்றாவது பந்தும் டி காக்கின் கைகளில் அடித்தன. அப்போதே வலியால் துடித்த டி காக், அதன்பின் அவுட்டானார். அப்போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர் முழுவதிலுமிருந்து விலகினார். 

இதையடுத்து அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கிளாசன், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அசத்தினார். ஒருநாள் போட்டியிலும் ஓரளவிற்கு சிறப்பாக பேட்டிங் செய்தார். ஒருநாள் தொடரின் ஒரேயொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது. அந்த வெற்றிக்கு கிளாசனின் சிறப்பான பேட்டிங்கும் முக்கியமான காரணம்.

அதுமட்டுமல்லாமல், கடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 30 பந்துகளில் 69 ரன்களை குவித்த கிளாசன், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கிளாசன் மீது அந்த அணியின் தேர்வுக்குழுவின் பார்வை திரும்பியுள்ளது. எனவே டி காக்கின் இடத்தை கிளாசன் பிடிப்பாரா என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது. ஆனால், டி காக்கும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால், அவரை அவ்வளவு எளிதாக அந்த அணி இழக்க விரும்பாது. 

ஆனால் கிளாசனுக்கு தென்னாப்பிரிக்க அணியில் ஏதாவது ஃபார்மெட்டில் நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே கிளாசன் சிறப்பாக செயல்பட்டாலும் கூட டி காக்கிற்கு இதுவே கடைசி தொடராக அமைந்துவிடாது.