நானோ, கும்ப்ளேவோ யார் பயிற்சியாளராக இருந்தாலும், இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வந்திருக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் நியமனத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடந்துகொண்ட விதத்தால் குழப்பம் நிலவியது. எனினும் இறுதியில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதை சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கும் ரவி சாஸ்திரி, அதன்காரணமாக தானும் முதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி இலங்கையின் காலேவில் தொடங்குகிறது. அதற்காக இந்திய அணி, மும்பையில் இருந்து நேற்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து ரவி சாஸ்திரி பேட்டியளித்தார்: அதில் அவர் கூறியது:

“கடந்த முறை இலங்கைக்கு இந்திய அணியுடன் சென்ற பிறகு நான் முதிர்ச்சியடைந்தேன். அதிலும் கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகப்பெரிய அளவில் முதிர்ச்சியடைந்த்கு இருப்பதாக கருதுகிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கான பாராட்டுகள் அனைத்தும் இந்திய வீரர்களையே சேரும். முதலில் நானும், பின்னர் கும்ப்ளேவும் இந்திய அணிக்கு பயிற்சியளித்தோம். யார் பயிற்சியாளராக இருந்தாலும், இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வந்திருக்கிறது.

இந்தியா இப்போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கிறதென்றால், அதற்கு வீரர்களின் கடுமையான உழைப்பே காரணம்.

கடந்த காலங்களில் பாரத் அருண் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவர் இந்திய 'ஏ' அணி, 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணி, ஜூனியர் உலகக் கோப்பை அணி போன்றவற்றுக்கு பயிற்சியளித்துள்ளார். எனவே என்னைவிட அவருக்குத்தான் வீரர்களைப் பற்றி நன்றாக தெரியும்.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடியது. அதில் எதிரணியின் 80 விக்கெட்டுகளில் 77-ஐ இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். பாரத் அருணின் சாதனையைப் பற்றி இதற்கு மேல் நான் சொல்ல தேவையில்லை. அது எல்லோருக்குமே தெரியும்.