Who will win the World Cup football match This cat is going to predict ...

உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெல்லப்போகும் அணியை கணிக்க 'அசிலிஷ்' என்ற பூனை தயார் செய்யயப்பட்டு வருகிறது. 

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் இரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ? அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அவர்களுக்கு ஆர்வம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. 

இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் களமிறங்கியது.

ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ? அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். 

அதுபோல ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று சரியாகவே கணித்தது.

தற்போது உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். 

‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ? அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறுமாம்.