உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்த நிலையில், அறிமுக வீரர் சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு ஏமாற்றம் மிஞ்சிய நிலையில், அறிமுக வீரரான சக இந்தியரான சச்சின் யாதவ் தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்த நிலையில், சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து இந்தியாவின் புதிய ஈட்டி எறிதல் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

யார் இந்த சச்சின் யாதவ்?

உத்தரப் பிரதேசத்தின் கேக்ரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சச்சின் யாதவ், 19 வயதில் ஈட்டி எறிதலைத் தொடங்கினார். கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு கண்ட சச்சின் யாதவ், அவருடைய அண்டை வீட்டாரின் ஆலோசனைகளைக் கேட்டு ஈட்டி எறிதலில் தனது திறமையைக் காட்ட களமிறங்கினார். இதுதான் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது.

கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ். தோனி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தனது உத்வேகமாகக் கொண்டவர் சச்சின் யாதவ். பின்னர் தனது 6 அடி 5 அங்குல உயரமும் இயல்பான தடகளத் திறனும் ஈட்டி எறிதலில் சிறந்து விளங்க முடியும் முடிவு செய்தார்.

வளரும் நட்சத்திரம்

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி, 2025 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற வெள்ளிப் பதக்கம் என சச்சின் யாதவ், இப்போது இந்தியாவின் வளர்ந்து வரும் ஈட்டி எறிதல் நட்சத்திரமாக மாறியுள்ளார். தற்போது அவர் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ளார். 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 84.39 மீட்டர் தூரம் எறிந்து ஒரு புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார். நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில், 82.33 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

டோக்கியோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில், நீரஜ் சோப்ராவுடன் அதே பிரிவில் சச்சின் யாதவ் இடம் பெற்றார். முதல் எறிதலில் 80.16 மீட்டர் என மெதுவாகத் தொடங்கினாலும், பின்னர் தனது திறனை வெளிப்படுத்தி 83.67 மீட்டர் தூரம் எறிந்து ஒட்டுமொத்தமாக 10-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

சாதனை படைத்த சச்சின் யாதவ்

இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தடுமாறிய நிலையில், சச்சின் யாதவ் தனது முதல் எறிதலில் 86.27 மீட்டர் தூரம் எறிந்து, தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை எட்டி அனைவரையும் கவர்ந்தார். இது உலக ஈட்டி எறிதல் அரங்கில் சச்சின் யாதவ் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தது.

நீரஜ் சோப்ரா போன்ற நட்சத்திரங்கள் மீது கவனம் இருக்கும்போது, சச்சின் யாதவின் அமைதியான அணுகுமுறையும், அழுத்தத்தின் கீழ் துல்லியமாக செயல்படும் திறனும் அவர் இந்தியாவின் நம்பகமான வீரர் என்பதை நிரூபித்துள்ளது. இறுதிப் போட்டியில் அவர் அடைந்த நான்காவது இடம், அவர் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, மிகவும் பக்குவப்பட்ட, கவனத்துடன் செயல்படும் வீரர் என்பதையும் உணர்த்துகிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கான பதக்க வேட்டையில் அவர் ஒரு நம்பிக்கைக்குரிய வீரராக உருவாகி வருவதை இது உறுதிப்படுத்துகிறது.