பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதல் இரு போட்டிகளில் தோற்று தொடரை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-ஆவது போட்டியில் வென்றதன் மூலம் ஆறுதல் தேடிக்கொண்டது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 281 ஓட்டங்களும், மேற்கிந்தியத் தீவுகள் 337 ஓட்டங்களும் குவித்தன.
பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் 208 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இதையடுத்து 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பிரத்வெயிட் 44, டெளரிச் 36 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
கடைசி நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 43.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது. பிரத்வெயிட், டெளரிச் ஆகியோர் தலா 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்காமல் முறையே 142 மற்றும் 60 ஓட்டங்கள் குவித்த பிரத்வெயிட் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். யாசிர் ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
கடைசிப் போட்டியில் தோற்றாலும், முதல் இரு போட்டிகளில் வென்றதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
