இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

அதன்பிறகு வரும் 21ம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ளதால் அதற்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. அந்த வகையில் உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக இளம் வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி வாய்ப்பு வழங்கியுள்ளது. 

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்டு ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. ஆண்ட்ரே ரசல் காயம் காரணமாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ரசல், பொல்லார்டு மற்றும் டேரன் பிராவோ ஆகியோர் டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் தொடக்க வீரர் ஹேம்ராஜ் சந்தர்பால், ஆல் ரவுண்டர் ஃபேபியன் ஆலன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷ்னே தாமஸ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

ஐபிஎல் கிரிக்கெட்டில் நாயகர்களாக திகழும் கெய்ல், கீரன் பொல்லார்டு, சுனில் நரைன், பிராவோ, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் அவர்களது ஆட்டத்தை காணமுடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), ஃபேபியன் ஆலன், சுனில் ஆம்பிரிஷ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், எவின் லிவிஸ், அஷ்லே நர்ஸ், கீமோ பால், ரோவ்மன் பவல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒஷ்னே தாமஸ்