மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 115.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களை பாகிஸ்தானுக்கு இலக்காக வைத்தது.
இந்த இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 90.5 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சமி அஸ்லாம் அதிகபட்சமாக 74 ஓட்டங்கள் அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-ஆவது நாள் முடிவில் 78 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அந்த அணியின் பிரத்வெயிட் 95, ஜேசன் ஹோல்டர் 6 ஓட்டங்களுடன் ஆட்டத்தை தொடங்கினர்.
இதில் ஹோல்டர் 30 பந்துகளுக்கு 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஆமிரின் பந்துவீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். மறுமுனையில், 211 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் சதமடித்தார் பிரத்வெயிட்.
ஹோல்டரைத் தொடர்ந்து வந்த பிஷூ 85 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஜோஸப் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இறுதி வீரர் கேபிரியேல் டக் அவுட் ஆனார்.
இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 115.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் பிரத்வெயிட் 318 பந்துகளுக்கு 142 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகமது ஆமிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அஸார் அலி 45, சர்ஃப்ராஸ் அகமது 19 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
முன்னதாக ஆடிய தொடக்க வீரர் சமி அஸ்லாம் 17 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். ஆஸாத் சஃபிக், யூனிஸ் கான் டக் அவுட் ஆக, மிஸ்பா 4 ஓட்டங்கள் எடுத்தார்.
