இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது. 

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு உலக கோப்பையை மனதில்கொண்டு ஒவ்வொரு அணியும் தங்களது வலுவான அணியை உருவாக்க முயன்று வருகிறது. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் சீனியர் வீரர்களை ஒதுக்கிவிட்டு இளம் அணியை தயார் செய்துவருகிறது. 

அந்தவகையில், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரர்களான கெய்ல், பிராவோ, பொல்லார்டு, சுனில் நரைன் போன்ற வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஜேசன் ஹோல்டர் தலைமையில் இளம் அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வலுவான இந்திய அணியை ஒருநாள் தொடரிலாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. ஏற்கனவே சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் எவின் லிவிஸ் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்து இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்றிருந்த லிவிஸ் விலகியிருப்பது அந்த அணிக்கு பாதிப்புதான். எனினும் அவருக்கு பதிலாக ஒருநாள் அணியில் பவலும் டி20 அணியில் நிகோலஸ் பூரானும் சேர்க்கப்படுவார்கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.