இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ், முதன்முறையாக ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் 4 ரன்களில் வெளியேறினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் பிரித்வி ஷா, அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 70 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பிரித்வி ஷா, இந்த போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இவரை தொடர்ந்து புஜாரா 10 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரஹானேவும் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்து கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், இந்திய கேப்டன் விராட் கோலியை வீழ்த்தினார். 

ஹோல்டர் ஸ்டம்பிற்கு நேராக வீசிய பந்து கோலியின் கால்காப்பில் பட்டதால் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் கேப்டன் கோலி. 45 ரன்கள் எடுத்த கோலி, அரைசதம் அடிக்க முடியாமல் வெளியேறினார். கோலியை விட்டிருந்தால் பெரிய இன்னிங்ஸை ஆடியிருப்பார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் கோலியை அதை செய்யவிடாமல் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வீழ்த்தினார்.