இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் இன்னிங்ஸில் அஷ்வினின் சுழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான இன்று சேஸும் பாலும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இருவருமே இன்றைய ஆட்டம் தொடங்கியது முதல் சிறப்பாக ஆடினர். குறிப்பாக குல்தீப் யாதவின் பவுலிங்கை அடித்து ஆடினர். அவரது பவுலிங்கை டிஃபென்ஸ் ஆடாமல் அட்டாக் செய்து ஆடினர். ஸ்வீப் ஷாட்டுகள் ஆடி பவுண்டரிகளை விளாசினர். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து கொண்டிருந்தபோது பாலின் விக்கெட்டை வீழ்த்தி உமேஷ் யாதவ் பிரேக் கொடுத்தார். 

பால் 47 ரன்களில் அவுட்டானார். அரைசதம் கடந்த சேஸ், அஷ்வினின் சுழலில் வீழ்ந்தார். அஷ்வினின் அருமையான பந்தில் கிளீன் போல்டாகி 53 ரன்களில் சேஸ் வெளியேறினார். அதன்பிறகு லீவைஸ் மற்றும் கேப்ரியல் ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இந்திய அணி சார்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உமேஷ் யாதவ், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஃபாலோ ஆன் பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.