We will win the top Taiwanese heroine - Saina Sindhu faith ...
பாட்மிண்டன் சர்வதேச தரவரிசையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள தைவானின் தாய் ஸு யிங்கை ஆட்டங்களில் வீழ்த்தி வெற்றி பெற முடியும் என்று இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்றுத் தொடங்கியது. இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சாய்னா, பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது சாய்னா செய்தியாளர்களிடம், "கடந்த ஆண்டில் 5 சாம்பியன் பட்டங்களை தாய் ஸு யிங் வென்றிருக்கிறார். இன்றைய சூழலில் அவர் மிகச் சிறந்த வீராங்கனையாவர். சாதுரியமாக விளையாடக் கூடியவர்.
தரவரிசையில் முதல் 15 இடங்களில் இருப்பவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சிலரால் மட்டுமே தாய் ஸு யிங்கை வீழ்த்த முடியவில்லை. அதனால், எங்களால் அவரை ஜெயிக்க முடியாது என்று கருத வேண்டாம். அவரை நிச்சயம் வீழ்த்துவோம்" என்று கூறினார்.
அண்மையில் நடந்துமுடிந்த இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய தாய் ஸு யிங்கிடம் தோல்வியைத் தழுவினார் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பி.வி.சிந்து, "அவரை நான் பாட்மிண்டன் பிரீமியர் லீக் (பிபில்) போட்டியில் வீழ்த்தியிருக்கிறேன். சர்வதேச போட்டிகளில் அவரை நிச்சயம் வீழ்த்துவோம் என்று கூறினார்.
தாய் ஸு யிங்கிடம் 11 போட்டிகளில் மோதி, அவற்றில் எட்டில் தோல்வி அடைந்தவர் பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது
