ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எல்லாவற்றுக்கும் மேலாக வீரர்களின் ஒருங்கிணைப்பு சாதிக்க வித்திட்டது என்று சென்னை எஃப்.சி-யின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் நடந்த இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) - 4 கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

கோப்பையை வென்றபிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியது: "இறுதிப் போட்டியில் விளையாடுவது அதுவும் எதிரணியை அவர்களது இடத்திலேயே சாய்ப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. 

இங்குள்ள சூழல் உள்ளூர் அணிக்கே சாதகமாக இருந்தது. 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போதிலும் தைரியமாக போராடி மீண்டு வந்து வெற்றி கண்டிருக்கிறோம். எத்தகைய நிலையில் பின்தங்கி இருந்தாலும் மனஉறுதியுடன் போராடினால் மீள முடியும் என்பதை இந்த சீசனில் காட்டியிருக்கிறோம்.

இறுதி ஆட்டத்தை பொறுத்தவரை முதல் பாதியில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது எங்களுக்கு சாதகமாக மாறியது. அது மட்டுமின்றி முதல்பாதி ஆட்டம் முடிந்ததும் எங்களது வீரர்களிடம் ‘பிற்பாதியில் தவறுக்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து ஆடுங்கள். வெற்றி பெறலாம் என்று கூறினேன். 

இந்த சீசன் முழுவதும் பல்வேறு தடைகளை தாண்டியே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக வீரர்களின் ஒருங்கிணைப்பு சாதிக்க வித்திட்டது" என்று அவர் கூறினார்.