ஐபிஎல் இறுதி போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை மூன்றாவது முறையாக சென்னை அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் சமமாக இருந்த வெற்றி வாய்ப்பை ஹைதராபாத்திடமிருந்து ஒரே ஓவரில் வாட்சன் கைப்பற்றினார்.

ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் வில்லியம்சன், யூசுப் பதான் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து முறையே 47 மற்றும் 45 ரன்கள் எடுத்தனர்.

ஷிகர் தவான், ஷாகிப் அல் ஹாசன், பிராத்வைட் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு ரன்கள் எடுத்து கொடுத்தனர். ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களின் கூட்டு முயற்சியால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 178 ரன்கள் குவித்தது.

புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் போன்ற சிறந்த பவுலர்களை கொண்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக 179 ரன்கள் என்ற இலக்கு என்பது கடினமான இலக்குதான்.

179 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஷேன் வாட்சன் மற்றும் டுபிளெசிஸ் ஆகியோர் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹைதராபாத் அணி பவுலர்கள் சிறப்பாகவே தொடங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் வாட்சனால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அந்த ஓவர் மெய்டனானது. சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், ஓவர் த்ரோவால் 5 ரன்கள் ஆனது. 3 ஓவருக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணி.

நான்காவது ஓவரில் டுபிளெசிஸ் அவுட், ஐந்தாவது ஓவரில் 4 ரன்கள், ஆறாவது ஓவரில் 15 ரன்கள் என பவர்பிளே ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. 

அதன்பிறகு ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடத் தொடங்கினார். 10 ஓவருக்கு சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. 12 ஓவருக்கு 104 ரன்கள். இந்த ஓவர் வரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்தது. ஏனென்றால், ரஷீத் கானுக்கு 2 ஓவர்களும் புவனேஷ்வர் குமாருக்கு ஒரு ஓவரும் எஞ்சியிருந்ததால், அந்த மூன்று ஓவர்களில் போதுமான அளவிற்கு ரன்களை கட்டுப்படுத்திவிட முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாய்ப்பு இருந்தது.

ஆனால், கடைசி ஓவர்கள் வரை காத்திருக்காமல் 13வது ஓவரிலேயே வெற்றியை ஹைதராபாத்திடமிருந்து பறித்துவிட்டார் வாட்சன். சந்தீப் சர்மா வீசிய 13வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் என 26 ரன்கள் குவித்தார் வாட்சன். 13வது ஓவரில் மட்டும் வாட்சன் அடித்த 26 ரன்கள் மற்றும் ஒரு வைடு உட்பட 27 ரன்கள் குவிக்கப்பட்டன.

அதன்பிறகு சென்னை அணிக்கு தேவையான ரன்ரேட் மளமளவென சரிந்தது. அந்த ஓவருக்கு பிறகே சென்னை அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆட்டத்தின் போக்கையே மாற்றியது சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவர் தான்.