தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஐடியா கொடுத்த வார்னர், ஒப்புக்கொண்ட கேப்டன் ஸ்மித், ஆகியோர் அவரவர் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பெரும் பின்னடைவையும் அவப்பெயரையும் ஏற்படுத்திவிட்டது. இருவரும் ஏற்கனவே இதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய வார்னர், நான் மதிக்கும், நேசிக்கும் என் சக வீரர்களுடன் நான் இனி களமிறங்க முடியாது என்பதை நினைக்கும் போது என் இதயம் உடைந்து நொறுங்குகிறது. நான் அவர்களுக்கு இழிவு தேடித்தந்து விட்டேன். மீண்டும் என் நாட்டு அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

என்ன நடந்ததோ அதற்கு முழுப்பொறுப்பேற்கிறேன். நான் எதில் ஈடுபட்டேனோ அதன் விளைவுகளுக்காக மிக ஆழமாக வருந்துகிறேன். ஒரு துணைக் கேப்டனாக என் பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்கிறேன். நான் உண்மையில் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள். நான் செய்த அந்தக் காரியம் என் வாழ்நாள் முழுதும் பெரிய கறையாகத் தொடரும் என்பதை அறிந்திருக்கிறேன். அடுத்த 12 மாதங்கள் ஆட முடியாது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். கிரிக்கெட்டில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக எதையோ செய்ய நினைத்து தவறாக முடிந்துவிட்டது. 

நாங்கள் மிக மோசமான முடிவை எடுத்து நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம் என மனம் வருந்திய வார்னர், பேட்டியின் போதே அழுதுவிட்டார்.