2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லட்சுமணன் 281 ரன்கள் அடித்த இன்னிங்ஸ்தான் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என ராகுல் டிராவிட் புகழ்ந்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக திகழ்ந்த விவிஎஸ் லட்சுமணன், தனது சுயசரிதையை “281 அண்ட் பியாண்ட்” என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் அறிமுக விழாவை 5 நகரங்களில் நடத்த திட்டமிட்டு அதன்படி ஒவ்வொரு நகரமாக அறிமுகம் செய்துவருகிறார். கொல்கத்தாவில் நடந்த இந்த புத்தக அறிமுக விழாவில் கங்குலி கலந்துகொண்டார்.

இந்நிலையில், பெங்களூருவில் நடந்த விழாவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய ராகுல் டிராவிட், லட்சுமணன் கொல்கத்தாவில் அடித்த 281 ரன்கள் தான் இந்திய வீரரால் ஆடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்பதில் சந்தேகமேயில்லை. அந்த இன்னிங்ஸ் ஆடப்பட்ட சூழல், விதம், அது ஏற்பத்திய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அதுதான் மிகச்சிறந்த இன்னிங்ஸ். அப்படியொரு மிகச்சிறந்த இன்னிங்ஸை அருகிலிருந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. என்னால் இப்போதும் கூட லட்சுமணன் ஆடிய இன்னிங்ஸை கற்பனையில் காண முடிகிறது. ஷேன் வார்னேவின் லெக் ஸ்பின்னை, லெக் ஸ்டம்பிற்கு வெளியே காலை நகர்த்தி லட்சுமணன் கவர் திசையில் அடித்தது, மெக்ராத் மற்றும் கில்லெஸ்பின் பவுலிங்கை டிரைவ் ஆடியது என அனைத்தும் என் கண்ணுக்குளே இருக்கிறது. அந்த இன்னிங்ஸை அருகிலிருந்து பார்த்தது நம்பமுடியாத ஓர் சிறந்த அனுபவம் என்று புகழ்ந்தார் ராகுல் டிராவிட். 

நான் பொதுவாகவே அதிகம் கிரிக்கெட் பார்க்க விரும்பமாட்டேன். அதுவும் எனது பேட்டிங்கை சுத்தமாகவே டிவியில் பார்க்கமாட்டேன். ஆனால் லட்சுமணனின் அந்த இன்னிங்ஸை மட்டும் ஆர்வமாக பார்ப்பேன். அந்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த தொடரில் நான் சரியாக ஆடவில்லை. லட்சுமணன் 281 அடித்த அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸில் நான் 6வது வீரராக களமிறங்கினேன். நான் இறங்கும்போதே லட்சுமணன் 90 ரன்களை கடந்துவிட்டார். அவரது ஆட்டம் தான் எனக்கு நம்பிக்கையளித்தது. அது ஒரு மேஜிக்கல் தினம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார். 

ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் மற்று லட்சுமணன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து இமாலய ஸ்கோரை எட்ட உதவினர். அபாரமாக ஆடிய லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் அபார வெற்றி பெறவைத்த லட்சுமணனின் இன்னிங்ஸ் காலத்தால் அழியாதது. அந்த இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமானது. இந்த இன்னிங்ஸைத்தான் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.