Vishwanathan Anand wins India Man of Chess Series

ஐல் ஆப் மேன் செஸ் தொடரின் 6-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், விதித் சந்தோஷ் குஜராத்தி, சுவப்னில் ஆகியோர் வெற்றிப் பெற்று அசத்தினர்.

இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளின் இடையில் உள்ள ஐல் ஆப் மேன் தீவில் நடக்கும் சர்வதேச செஸ் தொடரில் ‘மாஸ்டர்’ பிரிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் உட்பட 30 இந்திய நட்சத்திரங்கள் மற்றும் உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன் என 160 பேர் கலந்து கொண்டனர்.

இதில், 6-வது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், சேதுராமன் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 51-வது நகர்த்தலின்போது வெற்றியைத் தழுவினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹர்ஷா மோதினர். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய விதித் சந்தோஷ், 42-வது நகர்த்தலின்போது வெற்றியை அடைந்தார்.

மற்றப் போட்டிகளில் நார்வேயின் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் சுவப்னில் வெற்றி பெற்றனர்.

ஆறு சுற்றுகளின் முடிவில் நார்வேயின் கார்ல்சன் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் காருணா, இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் உள்ளிட்ட 17 பேர் தலா 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.