இந்திய அணியில் நீண்டகாலமாக இருந்துவரும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி என முதல் 3 இடங்கள் வலுவாக உள்ளன. தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் 6 மற்றும் 7வது இடங்களில் ஆடுவர். எனவே 4 மற்றும் 5வது வரிசை வீரர்களுக்கான தேடல் நீண்டகாலமாக நடந்துவருகிறது. 

அதற்காக சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, ராயுடு ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இவர்களில் ராயுடுவை தவிர மற்ற யாரும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவில்லை. 

ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய ராயுடு, இந்திய அணியின் 4வது வீரர் பிரச்னைக்கு தீர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகிறார். ரிஷப் பண்ட் 5வது வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இவர்கள் இருவரும் 4 மற்றும் 5வது வரிசை வீரர்களுக்கான இடங்களை கைப்பற்றிவிடுவர். 

இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி, நான்காம் வரிசை வீரரை கண்டுபிடிப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதற்கு முன் பல வீரர்களை சுழற்சி முறையில் ஆட வைத்தோம். ஆனால் யாரும் நிலைத்தன்மையுடன் பேட்டிங் செய்யவில்லை.

ராயுடுவுக்கு இப்போது முக்கியமான இடத்தை அளித்திருக்கிறோம். அவர் நிலைத்து நின்று பேட் செய்துவிட்டால் எங்கள் மிடில் ஆர்டர் பிரச்னை தீர்ந்துவிடும். உலக கோப்பைக்கு அது பற்றிய கவலையும் இருக்காது. ஆசிய கோப்பையில் ராயுடு சிறப்பாக ஆடினார். உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் நீண்டநாட்கள் இருப்பதால், அதற்கு ராயுடு தன்னை நிலைப்படுத்திக்கொண்டால் சிறப்பாக இருக்கும். ராயுடு மிடில் ஆர்டருக்கு சரியான வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார்.