வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்களின் மனைவி, குழந்தைகள், உதவியாளர்கள் ஆகியோரை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின் போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் தங்கக்கூடாது.

இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்களின் மனை, குழந்தைகள், உதவியாளர்கள் ஆகியோரை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ உயரதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, இந்திய அணியின் மேலாளர் சுனில் சுப்பிரமணியத்திடம் அதிகாரப்பூர்வ கோரிக்கை கடிதத்தை கோரியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகக்குழு இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க தயாராக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.