இங்கிலாந்தில் செய்த தவறுகளை ஆஸ்திரேலியாவில் செய்யமாட்டோம் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் நாங்கள் சிறப்பாகத்தான் ஆடினோம். எனினும் நாங்கள் செய்த தவறுகளால் தொடரை இழந்தோம். எனவே அங்கு செய்த தவறுகளை ஆஸ்திரேலியாவில் செய்யமாட்டோம். எதிரணிக்கு கடும் சவால் அளிக்கும் அணியாக எங்கள் அணி திகழ்கிறது. எனினும் சில நேரங்களில் நாங்கள் செய்யும் சிறிய தவறுகளால் வெற்றியை நழுவவிடுகிறோம். அதேநேரத்தில் எங்களை விட குறைந்த தவறு செய்யும் அணி வெற்றி பெறுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எங்களின் குறைபாடுகளை களைந்து சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம். தவறுகளை குறைப்பதே எங்களின் நோக்கம். எங்களுக்கு எதிராக சூழல் திரும்பும் நிலையில், அதிலிருந்து மீண்டுவருவது குறித்துத்தான் சிந்திப்போம் என்றார் கோலி.

ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து பேசிய கோலி, ஆக்ரோஷம் என்பதை பலரும் பல விதமாக அர்த்தம் கொண்டிருப்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் என்பது அணிக்காக ஒவ்வொரு பந்திலும் வெற்றி பெறுவது, அணிக்காக களத்தில் 120 சதவிகித அர்ப்பணிப்பை வழங்குவது ஆகும். அது ஆட்டக்களமாக இருந்தாலும் சரி, வெளியில் அமர்ந்து மற்றவர்களுக்காக கைதட்டுவதாக இருந்தாலும் சரி. எனது பார்வையில் ஆக்ரோஷம் என்பது இதுதான் என்று அதிரடியாக பதிலளித்தார் விராட் கோலி.