இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் சதத்தோடு சேர்த்து சாதனைகளையும் குவித்துவருகிறார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்திவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். 

ஒவ்வொரு போட்டியிலும் கிரிக்கெட் வரலாற்றில் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துவருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 140 ரன்களை குவித்த விராட் கோலி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி 157 ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் கோலியின் அதிரடியால் இந்திய அணி 321 ரன்களை குவித்தது. அதனால் இரண்டாவது போட்டி கடைசி நேர பரபரப்பில் டிராவில் முடிந்தது. 

இந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி, பல சாதனைகளை படைத்துள்ளார். அவற்றை பார்ப்போம்.

1. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விரைவில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார். கோலி வெறும் 205 இன்னிங்ஸ்களிலேயே 10 ஆயிரம் ரன்களை குவித்துவிட்டார். இந்த பட்டியலில் 263 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை குவித்த கங்குலி மூன்றாமிடத்திலும் 266 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை குவித்து பாண்டிங் நான்காமிடத்திலும் உள்ளனர். 

2. 10,000 ரன்களை கடக்க குறைந்த பந்துகளை எடுத்துக்கொண்ட வீரர் கோலி தான். ஒருநாள் போட்டிகளில் 10,813 பந்துகளில் 10 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார் கோலி. இதன்மூலம் ஜெயசூரியாவின் சாதனையை கோலி முறியடித்தார். ஜெயசூரியா 10 ஆயிரம் ரன்களை எடுக்க 11,296 பந்துகள் எடுத்துக்கொண்டார். 

3. ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3270 நாட்களில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை கோலி எட்டியுள்ளார். இதன்மூலம் அறிமுகமானதிலிருந்து 3969 நாட்களில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய டிராவிட்டின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். 

4. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்த பட்டியலில் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்த சாதனையை கோலி முறியடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1573 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இரண்டாமிடத்திலும் 1348 ரன்களை குவித்த ராகுல் டிராவிட் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

5. இந்தியாவில் 4000 ரன்களுக்கு மேலாக குவித்த வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர், தோனிக்கு அடுத்தபடியாக கோலி பெற்றுள்ளார்.

6. சொந்த மண்ணில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். இந்திய மண்ணில் 78 இன்னிங்ஸ்களில் ஆடி 4000 ரன்களை அடித்துள்ளார் கோலி. இதன்மூலம் இதற்கு முன்னதாக 92 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். இந்த பட்டியலில் கோலி முதலிடத்திலும் சச்சின் இரண்டாமிடத்திலும் தோனி மூன்றாமிடத்திலும் உள்ளனர். டீன் ஜோன்ஸ் நான்காமிடத்திலும் ஜாக் காலிஸ் ஐந்தாமிடத்திலும் ரிக்கி பாண்டிங் ஆறாமிடத்திலும் உள்ளனர். 

7. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் விளாசியுள்ளார் கோலி. கடந்த ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் 111 ரன்களை குவித்த கோலி, குவாஹத்தியில் கடந்த 21ம் தேதி நடந்த போட்டியில் 140 ரன்களையும் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 157 ரன்களையும் குவித்துள்ளார். 

8. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 சதங்களை விளாசியுள்ள கோலி, அந்த அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கோலிக்கு அடுத்த இடத்தில் 5 சதங்கள் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள் கிப்ஸ், ஆம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர். 

9. 2018 காலண்டர் ஆண்டில் ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதற்கு முந்தைய தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் கோலி 1000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக 15 இன்னிங்ஸ்களில் 2010ம் ஆண்டு ஆம்லாவும் அதே 15 இன்னிங்ஸ்களில் 2012ம் ஆண்டு கோலியும் 1000 ரன்கள் அடித்திருந்தது தான் சாதனையாக இருந்தது. 

10. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சேவாக்கிற்கு(219 ரன்கள்) அடுத்தபடியாக கோலி(157 ரன்கள்) இரண்டாமிடத்தில் உள்ளார். கடந்த போட்டியில் 152 ரன்கள் குவித்து இரண்டாமிடத்தில் இருந்த ரோஹித் சர்மாவை இந்த போட்டியில் கோலி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை அவர் பிடித்துவிட்டார்.