தோனியின் நீக்கம் குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்து நழுவிவிட்டார் கோலி.

மோசமான ஃபார்மில் இருக்கும் தோனி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தோனி அதிகபட்சம் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள ஒருநாள் உலக கோப்பை வரை தான் ஆடுவார். அதன்பின்னர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்பிறகு 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க உள்ளது. எனவே அதில் தோனி ஆடுவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்கும் நிலையில், டி20 அணியில் தோனி ஆடுவதில் அர்த்தமில்லை. எனவே அவருக்கு பதிலாக ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், தோனி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 

தோனியின் நீக்கம் குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தோனியை நீக்குவது குறித்து கோலி மற்றும் ரோஹித்திடம் கலந்தாலோசித்த பிறகுதான் முடிவு எடுத்தாக தெரிவித்தார். மேலும் மாற்று விக்கெட் கீப்பரை உருவாக்கும் முயற்சியாக அணியிலிருந்து தோனி நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவதாக தோனியிடம் விளக்கமளித்ததாகவும் அதை தோனி மனமார வரவேற்றதாகவும் பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றபிறகு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலியிடம் தோனியின் நீக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் தெளிவாக விளக்கமளித்துவிட்டார். அதனால் அதுகுறித்து நான் இங்கு அமர்ந்துகொண்டு பேச தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் அந்த உரையாடலில் கலந்துகொள்ளவில்லை. எப்படியும் தோனி ஒருநாள் போட்டிகளில் ஆடப்போகிறார். ஆனால் தோனியின் நீக்கம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை கூறி சர்ச்சைகளை கிளப்புகின்றன. அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது என்பதை ஒரு கேப்டனாக நான் உறுதியாக கூறுகிறேன். அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார் என்று கோலி கூறியுள்ளார். 

தோனியின் நீக்கம் குறித்து கோலி மற்றும் ரோஹித்திடம் கலந்தாலோசிவிட்டுத்தான் முடிவு எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறியிருந்த நிலையில், அந்த உரையாடலில் கலந்துகொள்ளவில்லை என கோலி கூறியுள்ளார்.