இந்திய அணியின் தடுப்புச்சுவர் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் அறிமுகமான மயன்க் அகர்வால் 76 ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதன்பிறகு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக புஜாரா - கோலி ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. வழக்கம்போலவே பொறுப்புடன் ஆடிய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். 

சிறப்பாக ஆடிய கோலி, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 82 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். சதத்தை தவறவிட்டாலும் சாதனையை தவறவிடவில்லை. இந்த 82 ரன்கள் குவித்ததன் மூலம் ராகுல் டிராவிட்டின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். 

இந்த 82 ரன்களுடன் சேர்த்து இந்த ஆண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் கோலி, 1138 ரன்களை குவித்துள்ளார். இதுதான் ஓராண்டில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ஒரு இந்திய வீரரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்னதாக 2002ம் ஆண்டு ராகுல் டிராவிட் குவித்த 1137 ரன்கள் என்பதே ஓராண்டில் வெளிநாட்டில் குவிக்கப்பட்ட இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அதை கோலி முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 82 ரன்கள் எடுத்தால் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலை இருந்தது. மிகச்சரியாக 82 ரன்களை எடுத்து டிராவிட் சாதனையை முறியடித்துள்ளார் கோலி. 

1. விராட் கோலி - 1138*ரன்கள் (2018)

2. ராகுல் டிராவிட் - 1137 ரன்கள்(2002)

3. மொஹிந்தர் அமர்நாத் - 1065 ரன்கள்(1983)