ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குவதற்கு முன்னதாக வலைப்பயிற்சியில் கோலி ஆடிய விதம் மிரட்டலாக இருந்தது. ஆனால் வலைப்பயிற்சியில் செம அடி அடித்த கோலி, முதல் போட்டியில் சுதாரிக்கும் முன்னரே அவுட்டாக்கப்பட்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் புஜாராவை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் சரியாக ஆடவில்லை. ராகுல், முரளி விஜய், கோலி, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 37 ரன்களும் ரிஷப் பண்ட் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் தலா 25 ரன்களும் எடுத்தனர். புஜாரா மட்டுமே பொறுப்பாக ஆடி சதமடித்து இந்திய அணியை நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியை பாட் கம்மின்ஸ் அவுட்டாக்கினார். கம்மின்ஸின் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெறும் 3 ரன்னில் வெளியேறினார் கோலி. கோலிக்கு கவாஜா பிடித்த கேட்ச் மிக அருமையான கேட்ச். 

விராட் கோலியை நிலைத்து நிற்க விடாமல் தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டது ஆஸ்திரேலிய அணி. இதுதான் அந்த அணி எதிர்பார்த்ததும் கூட. நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, வலைப்பயிற்சியின் போது கூட அபாரமாக ஆடினார். ஷமி, பும்ரா, உமேஷ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சுகளையும் அஷ்வின், குல்தீப் ஆகியோரின் ஸ்பின் பவுலிங்கையும் பறக்கவிட்டார். வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய ஷாட் பிட்ச் பந்துகளை அற்புதமாக புல் ஷாட் ஆடினார். ஸ்பின் பவுலிங்கை அட்டாக் செய்து ஆடினார். அவர் பயிற்சியின் போது ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அந்த வீடியோவை கண்ட கில்கிறிஸ்ட், சாம் பில்லிங்ஸ் உள்ளிட்ட முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் கோலியை புகழ்ந்து தள்ளினர். எனினும் வலைப்பயிற்சியில் நன்றாக ஆடி செம ஃபார்மில் இருந்த கோலியை, அசந்த நேரத்தில் வீழ்த்திவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். எனினும் அடுத்த இன்னிங்ஸில் கோலி கண்டிப்பாக அபாரமாக ஆடுவார் என்பதில் ஐயமில்லை.