இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்ட பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், திட்டமிட்டபடி புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடந்த மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீராங்கனையும் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. மிதாலி ராஜ் ஆடியிருந்தால் அந்த போட்டியில் வென்றிருக்கலாம் என்ற கருத்து வலுத்தது. 

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மற்றும் மிதாலி ராஜ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரையும் தனித்தனியே அழைத்து பிசிசிஐ விசாரணை நடத்தியது. 

இதற்கிடையே கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கைகளில் பிசிசிஐ ஈடுபட்டது. இந்நிலையில், ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவு மற்றும் துணை கேப்டன் மந்தனா ஆகிய இருவரும் பிசிசிஐ நிர்வாகக் குழுவிற்கு கடிதம் எழுதினர்.

எனினும் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுவருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 14ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான குழு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய உள்ளது. 

இதற்கிடையே, இந்திய மகளிர் அணி கேப்டனின் கோரிக்கையை ஏற்று ரமேஷ் பவாரையே பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்க வேண்டும் என முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி, பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவரும் நிலையில், நேர்காணலையோ புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான செயல்பாடுகளையோ இடையில் நிறுத்த முடியாது என்று வினோத் ராய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.