மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் டீ பிரேக் வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்த இரண்டு விக்கெட்டுகளையுமே பாட் கம்மின்ஸ் தான் வீழ்த்தினார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று காலை இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க ஜோடியான ராகுலும் முரளி விஜயும் நீக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹனுமா விஹாரியும் அறிமுக வீரர் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். 

இருவருமே நிதானமாக தொடங்கினர். கம்மின்ஸ், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோரின் வேகத்தை சமாளித்து ஆடினர். எனினும் 65 பந்துகளை சந்தித்து நிதானமாக களத்தில் நின்றுவிட்ட ஹனுமா விஹாரியை அபாரமான ஒரு பவுன்ஸரில் வீழ்த்தினார் பாட் கம்மின்ஸ். 19வது ஓவரில் ஹனுமா விஹாரிக்கு அபாரமான பவுன்ஸர் ஒன்றை வீசினார். அந்த பந்தை விடுவதா அடிப்பதா என்ற சந்தேகத்தில் அணுகிய ஹனுமா விஹாரி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 66 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே ஹனுமா ஆட்டமிழந்தார்.

விஹாரி ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்து டீ பிரேக்கிற்கு முன்பாக 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களுக்கு மேல் எடுத்து ஆடிவருகிறது.