இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சர்வதேச டென்னிஸ் போட்டியான் இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் சக நாட்டவரும், தனது தங்கையுமான செரீனா வில்லியம்ஸுடன் மோதினார். 

இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் செரீனாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். இதுவரை  29-வது முறையாக செரீனாவை சந்தித்த வீனஸ் வில்லியம்ஸ் அதில் 12 வெற்றிகளை பெற்றுள்ளார். 

மற்றொரு ஆட்டத்தில் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் பெலாரஸின் அலியாக்சான்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தினார். 

அதேபோன்று, ரஷிய வீராங்கனை டாரியா கசட்கினா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்க ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்சை வெளியேற்றினார்.

மற்றொரு பிரிவான ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்  6-2, 6-1 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் பிலிப் கிராஜினோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் தென்கொரியா வீரர் சூங் ஹயோன் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தினார்.