அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சகநாட்டவரான மேடிசன் கீஸை வீழ்த்தி அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மற்றும் மேடிசன் கீஸ் இடையே நடைப்பெற்றது.

நெருங்கிய தோழிகளான மேடிசன் கீஸ் மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்லோன் ஸ்டீபன்ஸ்க்கு, கோப்பையுடன் சேர்த்து ரூ.23.66 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இறுதிச்சுற்று வரை முன்னேறிய மேடிசன் கீஸ்க்கு ரூ.11.51 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

வெற்றிக்குப் பிறகு ஸ்டீபன்ஸ் கூறியது: “நான் இப்போதே ஓய்வு பெறலாம் என்று கூடத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற உயரத்தை எட்டுவதற்கு என்னால் இயலாது என்று எண்ணுகிறேன்.

காயத்திலிருந்து மீண்டு வந்ததை நினைக்கையில், எனக்கான நன்மைகள் கடந்த 6 வாரங்களில் ஒன்று கூடி வந்துள்ளன. நான் பட்டம் வென்றுள்ளது நம்ப முடியாத ஒன்று.

கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி இடது கால் பாதப் பகுதியில் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். அப்போது யாரேனும் என்னிடம் வந்து, "நீங்கள் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லப் போகிறீர்கள்' என்று கூறியிருந்தால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதிலளித்திருப்பேன்

என்னுடன் மோதிய மேடிசன் கீஸ் எனது சிறந்த தோழியாவார். இந்த ஆட்டத்தில் "டிரா' என்ற ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கூறியிருந்தேன். எது எப்படியிருந்தாலும், எங்கள் இருவரிடையேயான நட்பு தொடரும்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.