Update on the state of junior hockey Coimbatore Trichy teams progress to the semi finals
மாநில ஜூனியர் ஹாக்கி போட்டியில் கோவை, திருச்சி அணிகள் அசத்தலாக ஆடி எதிர் அணியை கலங்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டன.
வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான ஐந்தாவது மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது.
செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நான்காவது நாளான நேற்று காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஹாக்கி அணியும், வேலூர் மாவட்ட ஹாக்கி அணியும் எதிர்கொண்டன.
இதில், திருநெல்வேலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தது.
பிற்பகலில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அணியும், கோவை மாவட்ட ஹாக்கி அணியும் மோதிக் கொண்டன.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காமல் விறுவிறுப்பைக் கூட்டின. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில், கோவை அணியின் ரக்ஷன் 59-வது நிமிடத்தில் கோலடித்தார். அந்த கோல்தான் அந்த அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.
கோவை அணி 1-0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் திருச்சி மாவட்ட அணியும், திருநெல்வேலி மாவட்ட அணியும் மோதின. இதில் முதல் பாதி வரை இரு அணிகளும் கோலடிக்கவில்லை.
2-வது பாதி ஆட்டத்தில், திருச்சி அணியின் கோபிநாத், நந்தகுமார் ஆகியோர் 45 மற்றும் 54-வது நிமிடத்தில் இரண்டு கோலடித்து அசத்தினர். இதனால் திருச்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
