கவுண்டி கிரிக்கெட்டில் லன்காஷைர் அணியின் கேப்டன் டேன் விலாஸ் துரதிர்ஷ்டவசமாக பரிதாபமாக ரன் அவுட்டானார்.

இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகள் நடந்துவருகின்றன. அதில் டிவிஷன் 1ல் லன்காஷைர் மற்றும் வோர்செஸ்டெர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வோர்செஸ்டெர்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய லன்காஷைர் அணி 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

61 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வோர்செஸ்டெர்ஷைர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. 314 ரன்கள் என்ற இலக்கை லன்காஷைர் அணி விரட்டுகிறது. 

இந்த போட்டியில் லன்காஷைர் அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில், அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் டேவிஸும் கேப்டன் விலாஸும் களத்தில் இருந்தபோது, ஜோஷ் டங்க் வீசிய பந்தை டேவிஸ் அடிக்க, அது பவுலருக்கு நேராக வந்தது. பவுலர் பந்தை கண்டு காலைத் தூக்க, அந்த பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. அந்த நேரத்தில் கிரீஸை விட்டு வெளியே நின்றதால் விலாஸ் அவுட்டானார். துரதிர்ஷ்டவசமான முறையில் விக்கெட்டை இழந்தார் விலாஸ். இதனால் விலாஸும் டேவிஸும் அதிருப்தி அடைந்தனர். அதேநேரத்தில் ரொம்ப கஷ்டப்படாமல் விக்கெட்டை வீழ்த்தியதை வோர்செஸ்டெர்ஷைர் அணி கொண்டாடியது. இந்த விக்கெட்டின் வீடியோ, கவுண்டி கிரிக்கெட் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

இதுபோன்ற விக்கெட்டுகள் எல்லாம் அரிதினும் அரிதானவை. அதிலும் பந்து காலில் பட்டு சரியாக ஸ்டம்பில் அடிப்பது என்பது மிகவும் அரிது. விலாஸின் விக்கெட் விசித்திரமான ஒன்றுதான்.