உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் தான் கேஎல் ராகுல்தான் என்பதை தேர்வுக்குழு உறுதி செய்துவிட்டது. சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் இந்தியா ஏ அணியில் ஆடிய கேஎல் ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

எனவே இவர்தான் உலக கோப்பையிலும் ஆடுவார். புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக உலக கோப்பை அணியில் இடம்பெறுவர். ஆடும் லெவனில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஹர்திக் பாண்டியா மூன்றாவது ஆப்சனாக இருப்பார். தேவைப்பட்டால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும்.

தற்போதைய சூழலில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய மூவர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சரியாக 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்று, ஒருவேளை யாராவது ஒரு வீரருக்கு காயம் என்றால், மாற்று வீரர் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் கடைசி நேரத்தில் அணியில் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

உமேஷ் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை என்றாலும், டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவிற்கு இங்கிலாந்து தொடரில் அணியில் இடம்கிடைத்தது. ஆனால் ஐபிஎல்லில் வீசியதை போல இங்கிலாந்தில் வீச தவறிவிட்டார் உமேஷ் யாதவ். 

2018ம் ஆண்டில் மட்டும் 4 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள உமேஷ் யாதவ், 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். 4 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் சரியாக சோபிக்காததை அடுத்து விதர்பா அணிக்காக ரஞ்சி தொடரில் ஆடிய உமேஷ் யாதவ், மீண்டும் அபாரமாக வீசினார். 4 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார் உமேஷ் யாதவ். 

அதன் விளைவாக மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார் உமேஷ். ஆனால் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் ஆடாத நிலையில், அந்த போட்டிகளில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை என்றாலும், உலக கோப்பைக்கான அணியில் கடைசி நேரத்தில் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.