U-17 Football America won second time and advanced to quarter-finals
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான யு-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் அமெரிக்காவும், கானா அணியும் மோதின. இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரரான அயோ அகினோலாவை களமிறக்கியது அமெரிக்கா. அதற்கு 75-வது நிமிடத்தில் கிறிஸ்டோபர் கோஸ்லின் கொடுத்த பாஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அகினோலா, அதில் கோலடிக்க, அதுவே அமெரிக்காவின் வெற்றிக் கோலாக அமைந்தது.
இதன்மூலம் இந்தத் தொடரில் 2-வது வெற்றியைப் பெற்ற அமெரிக்கா, நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
நவி மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பெற்றது மாலி.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய மாலி அணி, ஆரம்பத்தில் கிடைத்த சில நல்ல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டது. இதன்பிறகு 38-வது நிமிடத்தில் ஜெமூசா கோலடிக்க, மாலி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் டியேவும், 86-வது நிமிடத்தில் கொனாட்டேவும் கோலடிக்க, மாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
டெல்லியில் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (அதாவது 49-ஆவது நிமிடத்தில்) கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து போராடிய இந்திய அணி 82-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை ஜேக்சன் அடித்தார். இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அடுத்த நிமிடத்திலேயே பீனாலோஸா கோலடிக்க, கொலம்பியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
