Asianet News TamilAsianet News Tamil

பத்து விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸை பந்தாடியது தூத்துக்குடி…

Tuticorin patriots team kicked Trichy Warriors by ten wickets
Tuticorin patriots team kicked Trichy Warriors by ten wickets
Author
First Published Jul 27, 2017, 9:58 AM IST


தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்தது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த திருச்சி அணியில் பாரத் சங்கர் - நிலேஷ் சுப்பிரமணியன் இணை முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 58 ஓட்டங்கள் சேர்த்தது. நிலேஷ் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் இந்திரஜித் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய பாரத் சங்கர் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஆதித்ய கணேஷ் 6 ஓட்டங்கள், ஜெகதீசன் கெளஷிக் 1 ஓட்டம், ஆதித்யகிரிதர் 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 14 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் அகில் ஸ்ரீநாத் களமிறங்க, மறுமுனையில் சற்று வேகமாக ஓட்டங்கள் சேர்த்த இந்திரஜித் 24 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு மூர்த்தி பிரபு 2 ஓட்டங்கள், அகில் ஸ்ரீநாத் 5 ஓட்டங்கள், ஜெகதீசன் கெளஷிக் 12 ஓட்டங்கள், ஜெபேஷ் மோசஸ் ஓட்டம் ஏதுமில்லாமல் வெளியேற 18.5 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்குச் சுருண்டது திருச்சி.

தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் சம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர் - கெளஷிக் காந்தி களமிரங்கினர். கெளஷிக் காந்தி 36 பந்துகளில் அரை சதமடிக்க, தூத்துக்குடி அணி 15.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

வாஷிங்டன் சுந்தர் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்களும், கெளஷிக் காந்தி 55 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி டிஎன்பிஎல்-லில் தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios