முத்தரப்பு டி 20 தொடரில் வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில்  வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நிதானமாக ரன்கள் எடுத்த இந்த ஜோடி 10-வது ஓவரில் பிரிந்தது. 35 ரன்கள் எடுத்த நிலையில் தவான், ருபேல் ஹொசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து சுரேஷ் ரெய்னா உடன் கைகோர்த்த ரோகித் அதிரடியாக ரன் குவித்தார்.

இரண்டு பேரும் அதிரடியாக ஆட இந்தியாவின் ரன் உயர்ந்தது. கடைசி ஓவரில் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ரெய்னா ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து இந்தியா 176 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வங்காளதேச அணியில் ருபேல் ஹொசைன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.


 
இதையடுத்து 177 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். லிட்டன் தாஸ் 7 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சவுமிய சர்கார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த இக்பால் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். அப்போது வங்காளதேசம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.

ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் கடந்தார். அதன்பின் முஷ்பிகுர் ரஹிம் உடன், கேப்டன் மஹ்மதுல்லா ஜோடி சேர்ந்தார். மஹ்மதுல்லா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரஹிம் உடன் ஜோடி சேர்ந்த சபீர் ரஹ்மான் நிதானமாக விளையாடினார். சபீர் ரஹ்மான் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மெய்தி ஹசன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. முஷ்பிகுர் ரஹிம் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக 16-ம் தேதி நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி 18-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.