2018ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஆண்டாகவே அமைந்தது. தென்னாப்பிரிக்க தொடர் வெற்றி, ஆசிய கோப்பை வெற்றி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் வெற்றி என ஒருநாள் கிரிக்கெட் வெற்றிகரமானதாகவே அமைந்தது. 

இந்த ஆண்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் ஷிகர் தவான். விராட் கோலி 14 போட்டிகளில் ஆடி 1202 ரன்களை குவித்த விராட் கோலி சர்வதேச அளவில் இந்த ஆண்டில் அதிக ஒருநாள் குவித்த வீரராகவும் 1030 ரன்களை குவித்த ரோஹித் சர்மா இரண்டாவது வீரராகவும் உள்ளனர். 

தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் மட்டுமல்லாது சர்வதேச தொடரான ஆசிய கோப்பையையும் இந்திய அணி வென்றது. இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஆண்டாக அமைந்த நிலையில், இந்திய வீரர்களின் மிகச்சிறந்த டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸை பார்ப்போம். 

1. விராட் கோலி - 160* vs தென்னாப்பிரிக்கா

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 159 பந்துகளில் 160 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதுதான் இந்த ஆண்டில் இந்திய வீரர் ஒருவரின் மிகச்சிறந்த இன்னிங்ஸ். இந்த போட்டியில் இந்திய அணி 303 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்க அணி 179 ரன்களில் ஆல் அவுட்டானதை அடுத்து இந்திய அணி இந்த போட்டியில் வென்று 3-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகித்தது. இந்த தொடரை இந்திய அணி 5-1 என வென்றது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு ஒருநாள் வெற்றி மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. கேப்டவுனில் கோலி அடித்த 160* ரன்கள் தான் இந்த ஆண்டில் இந்திய வீரரின் நம்பர் 1 இன்னிங்ஸ். 

2. ரோஹித் சர்மா - 137* vs இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 269 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா 114 பந்துகளில் 137 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 40 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக தொடங்க ரோஹித் சர்மாவின் ஆட்டம் உதவிகரமாக அமைந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரோஹித் சர்மாவின் இந்த ஆட்டம் அபாரமாக இருந்தது. 

3. ஷிகர் தவான் - 114 vs பாகிஸ்தான்(ஆசிய கோப்பை)

இந்த ஆண்டில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி என்றால் அது ஆசிய கோப்பையை வென்றதுதான். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அபாரமாக ஆடிய தவான் 114 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் தவான் - ரோஹித் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

4. ரோஹித் சர்மா - 152* vs வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என வென்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு 323 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த கடினமான இலக்கை இந்திய அணி 42வது ஓவரிலேயே எட்டி பிடித்தது. அதற்கு காரணம் ரோஹித் சர்மாவின் அபாரமான சதம். 117 பந்துகளில் 152 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை அபார வெற்றி பெற செய்தார். 

5. விராட் கோலி - 140 vs வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக குவாஹத்தியில் நடந்த முதல் போட்டியில் ரோஹித் சர்மா 152 ரன்கள் அடித்த அதே போட்டியில் விராட் கோலி 140 ரன்கள் அடித்தார். ரோஹித் - கோலியின் கூட்டணி ஆட்டம்தான் அந்த போட்டியில் இலக்கை எளிதாக எட்ட உதவியது. அந்த வகையில் அந்த ஒரே போட்டியில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரின் சதமும் டாப் 5ல் முக்கியமான சதங்கள்.