இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, கடந்தப் போட்டியில் இந்தியாவை தோல்வியின் விளிம்பு வரை கொண்டு சென்றது. அதனால் அந்த அணியும் அபாரமாக ஆட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட தொடக்க வீரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறார். அதனால் கடந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கெளதம் கம்பீருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது.

ரஞ்சி கிரிக்கெட்டில் சதமடித்த கையோடு களமிறங்கும் ராகுல், இந்தப் போட்டியில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கடந்தப் போட்டியில் சதமடித்த அவர், இந்தப் போட்டியிலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, அஸ்வின், ரித்திமான் சாஹா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்களில் புஜாரா, கோலி, அஸ்வின் ஆகியோர் கடந்தப் போட்டியில் இந்தியாவின் ரன் குவிப்பில் கணிசமான பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர்களான கருண் நாயர் அல்லது ஹார்திக் பாண்டியா சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருப்பினும், பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது. இந்திய பெளலர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே கடந்தப் போட்டியில் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவுக்குப் பதிலாக இஷாந்த் சர்மா இடம்பெறலாம் என தெரிகிறது. இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அதனால் இந்தப் போட்டியில் விக்கெட் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பலம் வாய்ந்த இங்கிலாந்து: இங்கிலாந்து அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாகவே உள்ளது. கேப்டன் குக், ஹஸீப் ஹமீது, ஜோ ரூட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் மிகப்பெரிய பலம் சேர்க்கின்றனர். இவர்களில் ஹஸீப் தவிர எஞ்சிய 4 பேரும் கடந்தப் போட்டியில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. மொயீன் அலி பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக ஆண்டர்சன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆண்டர்சன் விஷயத்தில் அதிக சிரத்தை எடுப்பதற்கு இங்கிலாந்து அணி விரும்பாவிட்டால் கிறிஸ் வோக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித், ஜாபர் அன்சாரி, மொயீன் அலி கூட்டணி பலம் சேர்க்கிறது.
இந்தியா (உத்தேச லெவன்): கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்) அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர்/ஹார்திக் பாண்டியா, அஸ்வின், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, இஷாந்த் சர்மா/உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து (உத்தேச லெவன்): அலாஸ்டர் குக் (கேப்டன்), ஹஸீப் ஹமீது, ஜோ ரூட், பென் டக்கெட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ்/ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆதில் ரஷித், ஜாபர் அன்சாரி, ஸ்டூவர்ட் பிராட்.