To see world cup football Prisoners hunger strike demanding repair the damaged TV

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வேண்டும் என்றும், சிறையில் பழுதடைந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை சரிசெய்து தருமாறும் அர்ஜென்டீனாவில் உள்ள சிறைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாக்‍களில் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியும் ஒன்று. 

இந்தப் போட்டி தொடரின் 21-வது பதிப்பு ரஷ்யாவில் இன்று இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது. 87 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியால் தலைநகர் மாஸ்கோ விழாக்‍கோலம் பூண்டுள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சௌதி அரேபியா அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காணும் வகையில், சிறையில் பழுதடைந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளை சரிசெய்து தருமாறு அர்ஜென்டீனாவின் பியூர்டோ மாட்ரின் நகரில் இருக்கும் சிறையில் உள்ள கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கால்பந்து விளையாட்டை பார்ப்பது தங்களது அடிப்படை உரிமை என்று கூறியுள்ள அவர்களில் சிலர், இதுதொடர்பாக புகார் மனு அளிக்க முனைந்துள்ளனர். 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டீனா அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை ஐஸ்லாந்தை சந்திக்கிறது என்பது கூடுதல் தகவல்.